Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் பூனைகள் அட்டகாசம்: தீயணைப்பு வீரர்களுக்கு போக்கு காட்டுகிறது

நாகர்கோவில், மே 19: நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எப்போதும் கோப்புகளோடும், மக்கள் கூட்டத்தோடும் பரபரப்பாக காணப்படும். ஆனால், இங்குள்ள சில ‘குறும்புக்கார’ பூனைகள், ஊழியர்களை விடவும் தீயணைப்புத் துறை வீரர்களைத் தான் அதிகம் திணறடித்து வருகின்றன. கலெக்டர் அலுவலகத்தின் உயரமான மாடிகளில் உள்ள ஜன்னல் சன்ஷேட்கள் தான் இந்தப் பூனைகளின் பேவரைட் ஸ்பாட். அடிக்கடி மாடிக்குச் செல்லும் பூனைகள், சன்ஷேடின் நுனியில் நின்று கொண்டு கீழே விழப்போவது போல பயங்கரமாகக் கத்துகின்றன. இதைக் கேட்கும் அலுவலக ஊழியர்கள், ‘பாவம் பூனை மாட்டிக்கொண்டது’ என்று பதறியபடி உடனடியாக ஒழுகினசேரி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுக்கின்றனர்.

தகவல் கிடைத்ததும், ஒழுகினசேரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தங்கள் மீட்பு வாகனத்துடன் சைரன் ஒலிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வருகின்றனர். வீரர்கள் ஏணியை தயார் செய்து, பூனையை லாவகமாகப் பிடிக்க முயற்சிக்கும் போது தான் அந்த சுவாரஸ்யமான ‘கிளைமாக்ஸ்’ நடக்கிறது. மீட்பு வீரர்கள் பூனையை நெருங்கிய அடுத்த நொடி, அதுவரை ‘காப்பாற்றுங்கள்’ என்பது போலக் கத்திக் கொண்டிருந்த பூனை, வீரர்களை ஒரு நக்கலான பார்வை பார்த்துவிட்டு, மிகச் சாதாரணமாக கீழே குதித்து ஓடி மறைந்துவிடுகிறது. எந்தப் பாதிப்பும் இன்றி பூனை நழுவிச் செல்வதைப் பார்த்து, கையில் பிடி வலைகளுடன் வீரர்கள் திகைத்து நிற்கின்றனர். இறுதியில், வேறு வழியின்றி வீரர்கள் தங்கள் வாகனத்துடன் மீண்டும் ஒழுகினசேரி அலுவலகத்திற்கே திரும்புகின்றனர்.

இந்த வினோதமான சம்பவம் கடந்த சனிக்கிழமையும் நடந்துள்ளது. இது ஒன்றும் முதல் முறையல்ல, கடந்த ஓரிரு வருடங்களாகவே இந்தப் பூனைகள் தீயணைப்புத் துறையினருக்குத் தொடர்ந்து இது போன்ற ‘வேலைகளை’க் கொடுத்து வருகின்றன. பூனைகளுக்கு உயரத்தில் இருந்து குதிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் மக்கள் பயந்து போய் எங்களை அழைக்கின்றனர். நாங்களும் மனிதநேய அடிப்படையில் வருகிறோம். ஆனால் இந்தப் பூனைகள் எங்களை ஏமாற்றுவதையே ஒரு வேலையாக வைத்திருக்கின்றன என தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்களோ, ‘இந்தப் பூனைகள் கலெக்டர் ஆபீஸ் பூனைகள் என்பதால், தீயணைப்புத் துறையினரையே அலற விடுகின்றன’ என நகைச்சுவையாகப் பேசி வருகின்றனர்.