Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

செங்கல் சூளையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களின் 34 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

ஆரல்வாய்மொழி, ஜூன் 21: ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் செங்கல் சூளையில் இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே வடமாநிலங்களை சேர்ந்த குழந்தைகளும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் செண்பகராமன் புதூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து இந்தி படித்த ஆசிரியர்கள் மூலம் 51 வடமாநில குழந்தைகளுக்கு கல்வியை கற்று கொடுத்தனர்.

இந்த நிலையில் புகார் குறித்து அறிந்ததும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் செண்பகராமன் புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒவ்வொரு செங்கல் சூளைகளிலும் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் அங்கிருந்த வடமாநில குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் எங்கிருந்தாலும் கல்வி கற்கலாம் என்றும், கல்வி தான் மிகப்பெரிய சொத்து என்றும் எடுத்துக்கூறி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் விளைவாக இந்த கல்வி ஆண்டில் செங்கல் சூளை தொழிலாளர்களின் 34 குழந்தைகளை கண்டறிந்து தொடக்கப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் வடமாநில தொழிலாளருடைய குழந்தைகள் கல்வி அறிவு பெறுகின்ற வாய்ப்பை உருவாக்கிய நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறும்போது இன்னும் நிறைய குழந்தைகளை கண்டறிந்து கல்வி அறிவு வழங்க உள்ளதாக கூறினர்.