Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கொட்டாரம் அருகே இளம்பெண் தற்கொலை; ஏஞ்சல் உடலை காட்டி ஆத்திரத்தில் தாக்கினோம்: வாலிபர் கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்

நாகர்கோவில், அக்.14: கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வன் (58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மூத்த மகள் ஏஞ்சல் (26). எம்.காம். பட்டதாரியான இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் ஏஞ்சலை, அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் ஆண்டனிராஜ் (30) என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து ெதால்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக தினமும், தானும் நிம்மதி இழந்து, குடும்பத்தினரும் நிம்மதி இழந்து தவிப்பதால் வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்த ஏஞ்சல் கடந்த 11ம்தேதி (ஞாயிறு) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த, ஏஞ்சல் உறவினர்கள் சிலர் கொட்டாரம் சந்திப்பில் நின்று கொண்டிருந்த ஆண்டனி ராஜை வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்து வந்து, ஏஞ்சல் உடலை காட்டி பாருடா... உன்னால் ஒரு உயிர் போய் விட்டது என கூறி சரமாரியாக தாக்கினர்.

இதில் ஆண்டனி ராஜ் இறந்தார். கன்னியாகுமரி போலீசார் தற்கொலை மற்றும் கொலை தொடர்பாக தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர். ஆண்டனி ராஜ் கொலை தொடர்பாக, ஏஞ்சல் உறவினர்கள் ஏசு ராஜ செல்வன் என்பவரின் மகன்கள் பெவின் (26), பெனிஸ் (25), வினிஸ் (25) மற்றும் பெரியவிளையை சேர்ந்த ரவி செல்வன் (56), ஏசு நேச செல்வன் (58) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் 5 பேரும் நேற்று காலை நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே தற்கொலை செய்த ஏஞ்சல் உடல் நேற்று முன் தினம் காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆண்டனி ராஜ் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று 3 வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கொலை செய்யப்பட்ட ஆண்டனி ராஜ் மீது அஞ்சுகிராமம், பழவூர், கன்னியாகுமரி, முன்னீர்பள்ளம், திருக்குறுங்குடி, ஏர்வாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்பட 11 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ெகாலை வழக்கில் கைதானவர்களில் நேச செல்வன், தற்கொலை செய்த ஏஞ்சலின் பெரியப்பா ஆவார். ரவி செல்வன் ஏஞ்சலின் சித்தப்பா ஆவார். இவர்கள் இருவருக்கும் திருமணமாக வில்லை. சகோதரர் ஞான செல்வனுக்கு, (ஏஞ்சலின் தந்ைத) 4 மகள்கள் உண்டு. இவர்களை தான் மிகவும் பாசத்துடன் இவர்கள் வளர்த்தனர். இவர்களின் மற்றொரு சகோதரர் ஏசு ராஜ செல்வன் ஆவார். இவருக்கு பெவின், பெனிஸ், வினிஸ் (இந்த வழக்கில் கைதானவர்கள்) என்ற 3 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் தனது சகோதரிகளான ஏஞ்சல் உள்பட அவரது சகோதரிகள் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தனர். இவர்களில் பெனீஸ், சென்னையில் ஐ.டி. கம்பெனி ஊழியர் ஆவார். பெவின் ஆயில் நிறுவனத்திலும், வினீஷ் விவசாயமும் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏஞ்சலை தினம், தினம் ஆண்டனி ராஜ் பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததை இவர்களின் குடும்பம் ஒட்டு மொத்தமாக கண்டித்து உள்ளது. பலமுறை ஏஞ்சலின் தந்தை மற்றும் குடும்பத்தினர் ஆண்டனி ராஜிடம், கெஞ்சியும், மிரட்டியும் எங்கள் வீட்டு பிள்ளையை தொந்தரவு செய்யாதே. அவள் விரும்ப வில்லை. அவள் விருப்பத்துக்கு மாறாக தொல்லை செய்ய வேண்டாம் என கூறி உள்ளனர். ஆனாலும் ஆண்டனி ராஜ் விட வில்லை. அவர்களையும் மிரட்டி உள்ளார். உங்கள் வீட்டு பிள்ளையை வாழ விட மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார்.

இதனால் தான் குடும்ப நிம்மதிக்காக ஏஞ்சல் உயிரை மாய்த்து கொண்டார். அவள் உயிரை மாய்த்த ஆத்திரத்தில் தான் ஆண்டனி ராஜை அழைத்து வந்து, இறந்து கிடந்த ஏஞ்சல் உடலை காட்டி உன்னால் உயிர் போய் விட்டதே என கூறி தாக்கினோம். அவர் இறப்பார் என தெரியாது. திட்டமிட்டு நாங்கள் கொலை செய்ய வில்லை. எங்கள் குடும்ப நிம்மதியை கெடுத்ததுடன், ஒரு உயிரை காவு வாங்கி விட்டானே என்ற ஆத்திரத்தில் தான் தாக்கினோம் என கைதானவர்கள் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் கூறினர்.

தினம், தினம் கதறி அழுத ஏஞ்சல்

ஆண்டனி ராஜ் கொடுத்த தொந்தரவு தாங்க முடியாமல் தினம், தினம் ஏஞ்சல் கதறி அழுது உள்ளார். ஒரு கட்டத்தில் தனது மகளை பாதுகாப்பாக ஏஞ்சலின் தந்தை அழைத்து சென்றார். அவர் இல்லாத நேரத்தில் உறவினர்கள் அழைத்து செல்வார்கள். ஏஞ்சல் வேலை செய்யும் இடத்துக்கே சென்றும் ஆண்டனி ராஜ் தொந்தரவு செய்து மிரட்டியும் வந்துள்ளார் என ஏஞ்சல் உறவினர்கள் கூறினர்.

சிங்கப்பெண் பாதுகாப்பு படை எங்கே?

* முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதும், பெண்களின் பாதுகாப்பு கருதி சிங்கப்பெண் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அனைத்து மாவட்டங்களிலும் சிங்கப்பெண் பாதுகாப்பு படை உள்ளது. ஆனாலும் ஏஞ்சல் போன்ற பல பெண்கள் தினம், தினம் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு தற்ெகாலை செய்வது வாடிக்கையாக உள்ளது. குமரி மாவட்டத்தில் படித்த பெண்கள் கூட, பாதிப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்கிறார்கள்.

* சிங்கப்பெண் படை என்று உருவாக்கியதே பெண்கள் பாதுகாப்புக்கு தான் என்று அரசு கூறுகிறது. ஆனாலும் தொடர்பு கொள்ள வேண்டும். பாதுகாப்பு கோர வேண்டும் என்ற எண்ணம் இன்னும் இளம்பெண்களுக்கு வர வில்லை. எனவே முதலில் சிங்கப்பெண் பாதுகாப்பு படையை நகர, கிராம அளவில் பெண்களிடம் ெகாண்டு சேர்க்க வேண்டும் என்பது ஏஞ்சலின் தற்கொலையில் இருந்து தெரிகிறது.