Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

17ம் தேதி தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது; தேர்தல் பணியாளர்கள், அரசு துறையினர் தபால் வாக்களிக்க வசதி மையங்கள் ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம் தகவல்

நாகர்கோவில், ஏப்.13: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவல்துறை மற்றும் அத்தியாவசியத் துறையினர் தங்களது தபால் வாக்கினைப் பதிவு செய்ய ஏதுவாக சிறப்பு வாக்குப்பதிவு வசதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான கால அட்டவணையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வரும் 15ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினைப் பதிவு செய்ய அந்தந்த பயிற்சி மையங்களிலேயே வாக்குப்பதிவு வசதி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நாளன்று தங்களது பணிகளில் இருக்க வேண்டிய ரயில்வே, அகில இந்திய வானொலி, கடல்சார் துறை, விமான நிலைய ஆணையம், செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஊடகவியலாளர்கள், சென்னை மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகிய அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவர்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் அமைந்துள்ள வசதி மையங்களில் 17.04.2026, 18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் மற்றும் இதர பணியாளர்கள் வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் 20.04.2026, 21.04.2026 மற்றும் 22.04.2026 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வாக்குப்பதிவு வசதி மையங்கள் செயல்படும். இந்த வாக்குப்பதிவு நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வைப் பார்வையிடலாம்.