Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; மலைப்பாதைகளில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

திருவனந்தபுரம், ஜூன் 6: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே கேரளம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு உள்பட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

எர்ணாகுளத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மலைப்பாதை வழியாக செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கும், நாளை மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கடந்த சில வருடங்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு மாவட்டத்தில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மலையோரப் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.