Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

‘தமிழ்நாட்டிலேயே குமரியில் தான் அதிகம் ’ உலக மீனவர் தினத்தன்று உள்ளூர் விடுமுறைக்கு ‘நோ’ சொன்ன கலெக்டர்

நாகர்கோவில், நவ.4: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ம் தேதி உலகம் முழுவதும் ‘உலக மீனவர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடல் வளம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ மக்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று குறும்பனையைச் சேர்ந்த ‘நெய்தல் மக்கள் இயக்கம்’ சார்பில் பெர்லின் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் அளித்த பதிலில்தான், யாரும் எதிர்பாராத சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

மனுதாரருக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட குமரி மாவட்டம் விடுமுறையில் எப்படி ‘டாப் கியரில்’ இருக்கிறது என்பது புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 4 நாட்கள் மட்டுமே உள்ளூர் விடுமுறை அனுமதிக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் இதுவரை உச்சபட்சமாக ஆண்டுக்கு 12 நாட்கள் உள்ளூர் விடுமுறையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு பொது விடுமுறை 24 நாட்கள், வரையறுக்கப்பட்ட விடுப்பு 3 நாட்கள், தற்செயல் விடுப்பு 12 நாட்கள் என விடுமுறைப் பட்டியல் ஏற்கெனவே நீண்டு கொண்டே செல்கிறது.

‘விடுமுறை விட்டால் ஜாலிதானே, இதில் என்ன பிரச்னை?’ என்ற கேள்வி எழலாம். ஆனால், அங்குதான் பள்ளி மாணவர்களின் பெரிய வேதனை ஒளிந்துள்ளது. அரசு விதிகளின்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டால், அதை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரமாக இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் திங்கள் முதல் வெள்ளி வரை படித்துக் களைத்துப் போகும் பள்ளி மாணவர்கள், வார இறுதியான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஓய்வின்றி படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பெரும் மன உளைச்சலையும், கல்விச் சுமையையும் ஏற்படுத்துகிறது என்று பள்ளிக்கல்வித்துறை கவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் 12 நாள் உள்ளூர் விடுமுறையையே ஈடுசெய்ய முடியாமல் பள்ளிகள் திணறி வரும் சூழலில், மாணவர்களின் நலன் கருதி கூடுதல் விடுமுறைக்கு பள்ளிக்கல்வித்துறையிடம் அனுமதி பெற இயலாது என்று மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் உலக மீனவர் தினத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வழியில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெய்தல் மக்கள் இயக்கம், ‘12 உள்ளூர் விடுமுறை வழங்குவதுவரை மாணாக்கர்களின் நலன் அரசுக்குத் தெரியவில்லை. 14 ஆண்டுகளாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்க கடந்த ஆண்டுகூட ஒரு மதத் தலைவரின் பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை வழங்கியபோதுகூட மாணாக்கர் நலன் அரசுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்’ என தெரிவித்துள்ளது.