பூதப்பாண்டி, நவ.4: ெபருஞ்சாணி காயல் பகுதியில் உலாவிய யானை கூட்டத்தை வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். குமரி மாவட்டம் கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் அரசு, தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த தோட்டங்களில் வேலை செய்வதற்காக தடிக்காரன் கோணம், வாளையத்து வயல், வெள்ளாம்பி பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.
இவ்வாறு சென்று வரும் தொழிலாளர்கள் புலி, கரடி, சிறுத்தை, யானை கூட்டங்களால் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன் தினம் உணவு, தண்ணீர் தேடி சுமார் 15 யானைகள் கூட்டமாக பெருஞ்சாணி காயல் பகுதிக்கு வந்தது. அந்த கூட்டத்தில் சில யானைகுட்டிகளும் இருந்தன. நீண்ட நேரமாக யானை கூட்டம் அங்கேயே நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விளையாடியது.
இந்த பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு வீடுகள் உள்ளது. ஆனால் யானை கூட்டம் வீடுகள் இருந்த பகுதிக்கு செல்லவில்லை. யானை கூட்டம் உலாவிய தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு ஊழியர்கள் விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியது: வழக்கமாக உணவு, தண்ணீர் தேடி ஜூன், ஜூலை மாதங்களில் தான் யானைகள் கூட்டமாக வரும். அதுவும் 2 முதல் 5 யானைகள் வரைதான் அதிகமாக பார்த்து இருக்கிறோம். தற்போது 15 யானைகள் குட்டியுடன் வந்து இருக்கிறது. இந்த யானை கூட்டம் வேறு பகுதியில் இருந்து தடம் மாறி தான் வந்திருக்க வேண்டும். காளிகேசம் மலை பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு வீடுகள் அதிகமாக உள்ளன. அந்த பகுதிக்கு யானைகள் செல்லவில்லை. யானைகளால் எந்த சேதமும் ஏற்படவில்லை. தண்ணீர் குடித்ததோடு சிறிது நேரம் ஜாலியாக விளையாடி உள்ளது அவ்வளவுதான்.
தற்போது யானை கூட்டத்தை பட்டாசு வெடித்து மீண்டும் காட்டுக்குள் அனுப்பி இருக்கிறோம். இனி மீண்டும் இந்த பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் யானைகள் கூட்டத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றனர். பெருஞ்சாணி காயல் பகுதியில் திடீரென உலாவிய யானை கூட்டத்தை வனத்துறையினர் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


