நாகர்கோவில் அருகே டிரஸ்ட் நடத்தி வந்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த நிர்வாகி திடீர் சாவு உடல் அழுகிய நிலையில் மீட்பு
நாகர்கோவில், நவ.4 : நாகர்கோவில் அருகே டிரஸ்ட் நடத்தி வந்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர் , தான் தங்கி இருந்த அறையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர் தாமஸ் கோரஸ்டன்ஸ்கி (60). கடந்த 2004ம் ஆண்டு சுனாமிக்கு பின், இங்குள்ள கடலோர கிராம மக்களுக்கு உதவும் வகையில் டிரஸ்ட் ஒன்று தொடங்கினார். தற்போது இந்த டிரஸ்ட்டின், தலைமை நிர்வாகியாக தாமஸ் கோரஸ்டன்ஸ்கி தான் இருந்து வந்தார்.
இந்த டிரஸ்ட் அலுவலகம் சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சொத்தவிளை அருகே உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் ஆஸ்திரியா சென்ற தாமஸ் கோரஸ்டன்ஸ்கி, கடந்த செப்டம்பரில் தான் ஒரு வருட விசா அனுமதியுடன் இந்தியா வந்தார். சொத்தவிளையில் உள்ள டிரஸ்ட் அலுவலகத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தாமஸ் கோரஸ்டன்ஸ்கி, தனது டிரஸ்ட் அலுவலகத்தில் இருந்து வெளியே வர வில்லை. அங்கு வளர்க்கப்படும் நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தன. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சென்று பார்த்த போது அலுவலகத்துக்குள் உள்ள தங்கும் அறையில் தாமஸ் கோரஸ்டன்ஸ்கி நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்தார். உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி புகாரின் பேரில், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர், தடயவியல் நிபுணர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் வந்து ஆய்வு செய்த பின் தான், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தாமஸ் கோரஸ்டன்ஸ்கி, வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதுடன், 1 வருட கால விசாவில் இந்தியா வந்த நிலையில் இறந்திருப்பதால் அதற்கு உண்டான உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் கூறினர். தாமஸ் கோரஸ்டன்ஸ்கிக்கு, இங்கு உறவினர்கள் யாரும் இல்லை. டிரஸ்ட் அலுவலக பணியாளர்களுக்கு தான் அவரை பற்றி தெரியும். அவர்களும் கடந்த சில மாதங்களாக பணிக்கு வர வில்லை என கூறப்படுகிறது.
ரத்தம் சொட்ட, சொட்ட காவல் நிலையம் வந்தவர்
கடந்த அக்டோபர் மாதம் 2ம்தேதி, நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு விரைவு பஸ்சில் தாமஸ் கோரஸ்டன்ஸ்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பெரிய பேக் பயணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. இதை பயணிகள் கண்டித்த போது, தாமஸ் கோரஸ்டன்ஸ்கி அவர்களை திட்டி உள்ளார். அப்போது பஸ்சில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் விளவங்கோட்டை சேர்ந்த பாபு என்பவர், நீங்கள் எப்படி அவதூறாக எங்கள் பயணிகளை திட்டுவீர்கள் என கேட்டபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தாமஸ் கோரஸ்டன்ஸ்கியை பிடித்து கீழே தள்ளியதில், பஸ்சின் ஜன்னல் கண்ணாடி இடித்து தலையில் காயம் ஏற்பட்டது.
ரத்தம் சொட்ட, சொட்ட பஸ்சில் இருந்து இறங்கி கோட்டார் காவல் நிலையத்துக்கு தாமஸ் கோரஸ்டன்ஸ்கி வந்தார். அவரை போலீசார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் தாமஸ் கோரஸ்டன்ஸ்கி, புகாரின் பேரில் அவரை தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரர், விளவங்கோட்டை சேர்ந்த பாபு (46) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாமஸ் கோரஸ்டன்ஸ்கி மீது பாபு அளித்த புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக ரத்தம் வடிந்த நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து தியானம் செய்தும், பரபரப்பை ஏற்படுத்தினார்.


