நாகர்கோவில், ஜூன் 2: நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் இருந்த கழிவுநீர் ஓடை நிரம்பி, பஸ் நிலையத்துக்குள் கழிவு நீர் ஆறாக ஓடியது. இதனால் பஸ் நிலையத்தில் கடுமையான துர்நாற்றம் வீசியது. தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானவர்கள் பஸ் நிலையத்துக்கு வருகிறார்கள். மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பெருக்
கெடுத்த கழிவுநீரும் பஸ் நிலையத்திற்குள் வருவதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று காலை செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் நேற்று காலை கழிவு நீரேற்று வாகனம் மூலம் கழிவு நீரை அகற்றும் பணி நடந்தது. அடைப்பு ஏற்பட்டு இருந்ததால், கழிவு நீர் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த அடைப்பையும் அகற்றினர்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பயணிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதாவும் காலையில் வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
