அருமனை, செப்.30:இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 3வது வார்டில் உள்ள முதப்பன்கோடு பொற்றை சாலை பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாலையை சீரமைக்ககோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி தலைவி உமாதேவி மற்றும் 3வது வார்டு கவுன்சிலர் பிஜி ஆகியோரின் முயற்சியால் சாலை அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து புதிய சாலை பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவி உமாதேவி கலந்து கொண்டு சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மேல்புறம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சைனி காட்டன், வார்டு உறுப்பினர் பிஜி, முக்கிய நிர்வாகிகள் டைட்டஸ், காட்வின், சார்லி, செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


