Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தோவாளை மலர் சந்தையில் அனைத்து வியாபாரிகளுக்கும் போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்

நாகர்கோவில், மே 13: தோவாளை மலர் சந்தையில் தமிழக அரசு பூ வியாபாரிகளை காக்க மேற்கூரையோடு எம்ஜிஆர் மலர் வணிக வளாகம் அமைத்து கொடுத்துள்ளது. தோவாளை மலர் சந்தைக்கு ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, குமாரபுரம், வடக்கன்குளம், மாடநாடார் குடியிருப்பு, பழவூர் போன்ற ஊர்களில் இருந்து பிச்சிப்பூ, கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூ, பெங்களூரு, ஓசூர், சேலம், ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தி, சேலம் அரளி, பட்டன் ரோஸ் ஆகியவை வருகின்றன.

தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கண்ணங்குடி ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி, மரிக்கொழுந்தும், தோவாளை, ராஜாவூர், மருங்கூர், செண்பகராமன்புதூர் ஆகிய ஊர்களில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, தாமரை போன்ற மலர்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.பின்னர் அவை கேரள உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பூச்சந்தையில் மூன்று மாடிகளில், கீழ்தளத்தில் 35 கடைகளும், மற்ற இரு தளங்களில் 40 கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு ரூ.2,150 வாடகையாக வசூலிக்கப்படுகிறது. மின்கட்டணத்தை தனியாக கடைக்காரர்கள் செலுத்த வேண்டும். கீழ்தளத்தில் உள்ள 35 கடைக்காரர்கள் மட்டும் கடைக்கு முன் உள்ள இடத்தில் பாய் விரித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

மற்ற கடைக்காரர்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. மேலும் மற்ற வியாபாரிகள் பாய் விரித்து வியாபாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், நேரில் சந்தித்தும் பயன் இல்லை. இதனால் வியாபாரிகள் போராட கூடிய சூழ்நிலைக்கு வந்துள்ளனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் அனைத்து வியாபாரிகளுக்கும் விற்பனை செய்ய போதிய இட வசதி செய்ய முன்வர வேண்டும் என்று வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அளவீடு பணி

இது குறித்து வேளாண்மை துணை இயக்குநர்(வணிகம்) ஜோஸ், குமரி மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைகுழு செயலாளர் விஷ்ணப்பன் ஆகியோர் கூறியதாவது: தோவாளை மலர் வணிக வளாகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சந்தை வளாகத்தில் தரையில் பாய் விரித்து பூ வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன்மூலம் அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் வியாபாரிகள் வெயில், மழையில் இருந்து பாதுகாத்து கொள்ள வளாகத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் வியாபாரம் செய்யும்போது ஏற்படும் பிரச்னையை தவிர்க்கும் வகையில் பொறியியல் பிரிவு மூலம் இடம் அளவீடு செய்து, இன்னும் 15 நாட்களில் அனைத்து வியாபாரிகளுக்கும் வழங்கப்படும். என்றார்.