நாகர்கோவில் : மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் மாதத்தில் பாதுகாப்பு மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, தென்மாவட்டங்கள் மற்றும் கேரளா மார்க்கமாக இயக்கப்படும் சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாகக் கேரளா செல்லும் சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16127) குறிப்பிட்ட 5 நாட்கள் தாமதமாகப் புறப்படும். அதன்படி, வரும் நவம்பர் 7, 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில், இந்த ரயில் தாம்பரத்திலிருந்து 1 மணி நேரம் தாமதமாக நண்பகல் 12.10 மணிக்குப் புறப்படும் என நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால், வழியில் உள்ள நிலையங்களுக்கும் இந்த ரயில் வழக்கமான நேரத்தை விடக் குறிப்பிட்ட அளவு தாமதமாகவே சென்றடையும். எனவே, குறிப்பிட்ட நாட்களில் தென்மாவட்டங்களுக்கும் கேரளாவிற்கும் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த நேர மாற்றத்தைக் கவனித்துத் தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.


