காஞ்சிபுரம், செப்.30: உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சுற்றுலாவை மறுவடிவமைக்க டிஜிட்டல் செயல் திட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில் சுற்றுலா தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோமதி தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவரும் எம்.எம்.ஹோட்டல் உரிமையாளருமான பன்னீர்செல்வம், ஜி.ஆர்.டி. ஹோட்டல்ஸ் பொது மேலாளர் கிறிஸ்ட் லீ, தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் நாகராஜ், மாவட்ட சுற்றுலா வழிகாட்டி மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், 150க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா கலைக்குழுவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சுற்றுலா தின கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியில் உதவி சுற்றுலா அலுவலர் சரண்யா நன்றி கூறினார்.


