திருப்போரூர், செப்.26: பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, ஆலத்தூரில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலை மூலம், திருப்போரூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில், தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சோப்பு, பிரஷ், பற்பசை போன்றவை வழங்கப்பட்டது.
மேலும், சிறுங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப்பிரிவின் மூலமாக மருத்துவர் வானதி நாச்சியார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள், பேருந்து நிலையத்தில் இருந்த நடத்துநர்கள், ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு சித்த மருந்துகளையும், நிலவேம்பு குடிநீரையும் வழங்கினர். இம்முகாமில் செயல் அலுவலர் சங்கீதா, சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


