திருப்போரூர், செப்.25: கேளம்பாக்கம் அடுத்த தையூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (34). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த அவரது தாயார், அவரை கடுமையாக திட்டி மது அருந்தினால் வீட்டிற்கு வரக்கூடாது என்று கண்டித்துள்ளார். பின்னர், தனது அறைக்கு சென்று கதவை மோகன் தாழிட்டுக் கொண்டார். மகன் தூங்கி இருப்பான் என்று நினைத்த அவரது தாயார், நேற்று காலை அவரது கதவை தட்டி உள்ளார்.
நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், அருகில் இருந்தவர்கள் கூப்பிட்டு கதவை உடைத்து பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் மோகன் இறந்து கிடந்தார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


