திருக்கழுக்குன்றம், செப்.25: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதீஸ்வரன். கார் டிரைவரான இவருக்கு ஒரு மகளும், மோனீஸ்வரன் (14) என்ற மகனும் உள்ளனர். மகளும், மகனும் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் 9ம் வகுப்பு படித்து வந்த மோனீஸ்வரன் நேற்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டதாகவும், அதிகமாக வலிப்பதாகவும், தனது வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
பின்னர் மயக்கமடைந்த மோனீஸ்வரனை தாமதமாக சதுரங்கப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அதற்குள் மாணவன் மோனீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து மோனீஸ்வரனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கல்பாக்கம் போலீசில் புகார் கொடுத்து, தனது மகனின் இறப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் மெத்தனத்தன்மைதான் காரணம் என்று குற்றம் சாட்டினர். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


