உத்திரமேரூர், ஆக.21: உத்திரமேரூர் பேரூராட்சி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (24). பெயின்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதமாகிறது. நேற்று முன்தினம் லிங்கேஸ்வரன் புதிதாக பைக் வாங்கினார். இதில் மனைவி கீதாலட்சுமியை ஏற்றிகொண்டு மலையாங்குளம் ஊராட்சி காட்டுகொல்லை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து உத்திரமேரூர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அமராவதிபட்டினம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியதில், லிங்கேஸ்வரன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த உத்திரமேரூர் பேலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லிங்கேஸ்வரனின் உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




