பருவமழை முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு துறை சார்பில் மதுராந்தகம் ஏரியில் மழைக்கால மீட்பு ஒத்திகை: மாணவ, மாணவியர் பங்கேற்பு
மதுராந்தகம், செப். 13:மதுராந்தகம் ஏரியில் வடகிழக்குப் பருவமழையொட்டி தீயணைப்பு துறை சார்பில், மழைக்கால சிறப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதில், அரசு அதிகாரிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை எதிர் கொள்ளும் விதமாக மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தீ அணைப்பு துறை அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.
மதுராந்தகம் கோட்டாட்சியர் ரம்யா முன்னிலை வகித்தார். மதுராந்தகம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமலை அனைவரையும் வரவேற்றார். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், மகேந்திரா சிட்டி, செய்யூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மழை வெள்ளத்தால் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளவர்களை எப்படி மீட்பது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் வீட்டில் உள்ள வாட்டர் கேன் பிளாஸ்டிக் கேன் காய்ந்த மரங்கள் வாழைமரம் உள்ளிட்ட பொருட்களை வைத்து எப்படி கரை சேருவது, மழை வெள்ளத்தில் சிக்கி மயங்கியவர்களையும் நீரில் மூழ்கி மயங்கியவர்களையும் முதலுதவி சிகிச்சை அளித்து எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்து தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பாலாஜி, உதவி மாவட்ட அலுவலர் செந்தில் குமரன், நிலை அலுவலர்கள் வீரராகவன், ரமேஷ், பாபு, தங்கதுரை, அமுல் தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.