செங்கல்பட்டு, ஆக.13: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வையாவூர் குறு வட்டம் பிலாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் கலெக்டர் வீரப்பன், பொதுமக்களிடமிருந்து 80க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக இரண்டு நபர்களுக்கு தலா ரூ.3500 மதிப்பிலான காதொலி கருவியும், ஒருவருக்கு ரூ.850 மதிப்புடைய ஊன்று கோலும் கலெக்டர் வழங்கினார். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் வாயிலாக 50 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சம் மதிப்பில் நத்தம் பகுதிக்கு பட்டா வழங்கினார்.
தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு நபர்களுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மூன்று நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, ஆறு நபர்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் இரண்டு நபர்களுக்கு விதவை உதவித்தொகை என ரூ.67,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வட்ட வழங்கல் அலுவலகத்தின் வாயிலாக பொது விநியோக திட்டத்திற்கான மின்னணு குடும்ப அட்டையினை 10 நபர்களுக்கு கலெக்டர் வழங்கினார். இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




