ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி: காஞ்சி கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம், நவ.12: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக கேபின் க்ரூவ், விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த 18 முதல் 23 வயது நிரம்பி, 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையும் தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பயிற்சி சான்றிதழ் உள்ளவார்கள் தனியார் விமான நிறுவனங்களிலும், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். பின்னர், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் ஊதிய உயர்வு பெறலாம். தற்போது வரை தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி பெற்ற 200 நபர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவன சேவை மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, இப்பயிற்சியில் சேர்வதற்கு விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.