மதுராந்தகம், ஆக. 12: மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் மின்னல் சித்தாமூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு அருகில் மின்னல், கீழ் மின்னல், கீழ்ப்பட்டு, பாபு ராயன்பேட்டை, களத்தூர், அத்திவாக்கம், அன்னங்கால், புரங்கால், குணம்கரணை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராம மக்கள் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்டுதோறும் இரண்டு போகம் நெற்பயிர் நடவு செய்து அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல்மணிகளை மின்னல் சித்தாமூர் அருகே பாபு ராயப்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் திறக்கப்படும் தற்காலிக திறந்தவெளி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வழங்குகின்றனர். இங்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்தப் பகுதியில் நிரந்தரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர விவசாயிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.



