Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கூடுவாஞ்சேரி, டிச.10: ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை 14 கிமீ கொண்டது. இதேபோல், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் தொடங்கி கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் இணையும் மேலைக்கோட்டையூர்-கல்வாய் சாலை 10 கிமீ கொண்டது. இந்த 2 சாலைகளும் மாநில ஊரக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த சாலையோரங்களில் காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், ஹவுசிங் போர்டு, முருகமங்கலம், நல்லம்பாக்கம், மலரோசாபுரம், அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், குமிழி, ஒத்திவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இதில், மேற்படி கிராமப்புறங்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் சரிவர பேருந்துகள் இயங்காததால் தினந்தோறும் 7 கிமீ தூரத்திற்கு நடந்தே சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை மற்றும் மேலைக்கோட்டையூர்-கல்வாய் சாலையில் தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்கின்றனர். இதனால், மாணவர்கள் மற்றும் அன்றாடம் வேலைக்கும், வெளியூர்களுக்கும் செல்வோர் என அனைத்து தரப்பினரும் உயிர் பயத்துடனேயே சாலைகளில் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என்றும், இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் ஊனைமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக 100க்கும் மேற்பட்ட கிரசர்கள் இயங்கி வருகின்றன. இதில், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளிலிருந்து ராட்சத டாரஸ் லாரிகளில் பாராங்கற்கள் மற்றும் சக்கை கற்களை ஏற்றிக்கொண்டு வந்து கிரசர்களில் கொட்டி அரைக்கின்றனர். பின்னர் ஜல்லிகற்கள், சிப்ஸ், பவுடர் மற்றும் எம்சாண்ட் ஆகியவற்றை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு விற்பனைக்காக ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். மேற்படி, சாலைகளில் 18 டன் எடைக்கு மேல் லோடுகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 60 முதல் 90 டன் எடை வரை லோடுகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்று வருகின்றனர். இதில், பல ஓட்டுனர்கள் மது போதையில் வாகனங்களை இயக்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சாலைகளில் ஓவர் லோடு ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்கள் மோதி கால்நடைகளும் உயிரிழக்கின்றன என்றனர்.