Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்போரூர் இள்ளலூர் சாலையில் உள்ள மதுக்கடையால் பொதுமக்கள் அவதி: இடம் மாற்ற கோரிக்கை

திருப்போரூர்,டிச.10: திருப்போரூர் இள்ளலூர் சாலையில் உள்ள மதுக்கடையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் ஓ.எம்.ஆர். சாலை பேருந்து நிலையம், ரவுண்டானா, மாமல்லபுரம் சாலை, இள்ளலூர் சாலை ஆகிய 4 இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதில் திருப்போரூரில் போலீஸ் குடியிருப்பு எதிரே இருந்த ஒரு மதுக்கடையும், பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு மதுக்கடையும், ரவுண்டானா அருகே இருந்த ஒரு மதுக்கடையும் மூடப்பட்டன. தற்போது இள்ளலூர் சாலையில் ஒரு மதுபானக்கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்த மதுபானக் கடையை கடந்துதான் இள்ளலூர், செங்காடு, காயார், வெண்பேடு, காட்டூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேருந்து வராத நேரங்களில் ஆட்டோ, சைக்கிள் போன்றவற்றிலும் சிலர் நடந்தும் கிராமங்களுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும் வழியிலேயே மதுக்கடை உள்ளதால் குடிமகன்கள் பெண்களை கிண்டல் செய்யும் சம்பவம் நடக்கிறது.

மேலும், அருகில் உள்ள ஏரிக்கரை மற்றும் வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பல்வேறு பொருட்களை கால்வாய்களிலும், விவசாய நிலங்களிலும் வீசிச்செல்கின்றனர்.

இந்த மதுக்கடை முன்பு ஏராளமான தற்காலிக கடைகளும் இப்பகுதியில் இயங்கி வருகின்றன. ஏரிக்கரைைய ஒட்டி அமைந்துள்ளதால் பலரும் தங்களது பைக்குகளை சாலையோரம் நிறுத்திவிட்டு மதுக்கடைக்கு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் திருப்போரூர் பேரூராட்சி எல்லைக்குள் இயங்கும் இந்த ஒரே மதுக்கடையை ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு மதுக்கடையை மாற்றுவதன் மூலம் பொதுமக்கள், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுவதோடு காவல்துறை பாதுகாப்பும் தேவைப்படாது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.