கூடுவாஞ்சேரி, ஆக.8: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையிலிருந்து நந்திவரம் செல்லும் பிரதான சாலையில் புதுப்பாளையத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளிடை முன்னிட்டு நேற்று அம்மனை தரிசிப்பதற்காக குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்தனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று 4 பெண் குழந்தைகள் உள்பட 10 பேரை கடித்து குதறியது.
இதனை கண்டதும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். இதில் துரத்தியவர்களையும் அந்த குரங்கு விட்டு வைக்கவில்லை. இதில் படுகாயம் அடைந்த 4 பெண் குழந்தைகள் உள்பட 10 பேரும் அருகிலுள்ள நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக சென்றனர்.



