Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பஸ் மீது பைக் மோதி பிளஸ் 2 மாணவன் பலி

குன்றத்தூர், ஜன.8: குன்றத்தூர் அருகே அரசு பேருந்து மீது பைக் மோதியதில் பிளஸ் 2 மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் அடுத்து இரண்டாம் கட்டளை, சந்திரசேகர் புரம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது, மகன் சரவணன் (17). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும், டியூஷனுக்குச் சென்ற மாணவன் சரவணன், டியூஷன் முடிந்ததும் மீண்டும் தனது வீட்டிற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் செல்லும் பிரதான சாலையில் ஆண்டாள் குப்பம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்து மீது மாணவன் சரவணன் ஓட்டிச்சென்ற ைபக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உரிய லைசென்ஸ் பெறாமல் சிறுவர்கள் பைக்கினை ஓட்டி விபத்தில் சிக்கும்போது, அதற்கு காரணமான சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்வது வழக்கம். இந்த சாலை விபத்திலும் லைசென்ஸ் இல்லாமல் ைபக்கில் ஓட்டி விபத்தில் சிக்கி பலியான மாணவனின் தந்தை மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்போதான், இனி வரும் காலங்களில் சிறுவர்கள் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுவது ஓரளவேனும் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ்2 மாணவன் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.