Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் பகுதியில் சாலையில் சென்ற கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசம்

கூடுவாஞ்சேரி, பிப்.5: சென்னை, தி.நகர், தாமஸ் ரோடு, 2வது தெருவை சேர்ந்தவர் கோபி (39). இவர், கூடுவாஞ்சேரி அடுத்த, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாமியார் கனகவள்ளியை பார்ப்பதற்காக, தனது மனைவி சந்தியாவை காரில் ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கூடுவாஞ்சேரி அடுத்த, தைலாவரம் சிக்னல் அருகே சென்றபோது காரின் முன் பக்கத்தில் திடீரென கரும்புகை கிளம்பியது. இதனை கண்டதும், கோபி மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் அதிர்ச்சியடைந்து காரை விட்டு உடனே இறங்கினர்.

பின்னர், கார் முன்பக்கம் பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கார் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் நேற்று மாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் ஒரு கார் சென்றது. அப்போது திடீரென இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. இதனைக் கண்ட டிரைவர் காரை நிறுத்தினார். உடனடியாக அதில் பயணம் செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கீழே இறங்கினர். பின்னர் காரில் மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்தது. அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து எரிந்த காரை நெடுஞ்சாலை அருகே ஓரம் கட்டினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.