Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்போரூர் மாமல்லபுரம் கோயில்களில் மாசி பவுர்ணமியை முன்னிட்டு தெப்ப உற்சவம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்போரூர், மார்ச் 3: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று 10ம் நாள் நிகழ்ச்சியாக பகல் 12 மணிக்கு சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உற்சவமூர்த்தி சரவணப் பொய்கையில் இறங்கி நீராடும்போது, பக்தர்கள் நான்கு கரைகளிலும் இறங்கி நீராடினர். தொடர்ந்து, இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நீரில் மிதக்க விட்டு வழிபட்டனர். தெப்ப உற்சவத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. மேலும் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாகவும் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலுக்கு, சொந்தமான புஷ்கரணி தெப்பக்குளம் கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ளது. இக்குளத்தில், ஆண்டுதோறும் மாசி பவுர்ணமி அன்று தெப்ப உற்சவமும், மறுநாள் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு தலசயன பெருமாள் ராமர் பட்டாபிஷேக திருக்கோலத்தில் லட்சுமணன், சீதையுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவுக்கான, ஏற்பாடுகளை தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம், வியாபாரிகள் மற்றும் தெப்ப உற்சவ கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தீர்த்த வாரி உற்வசம்

சக்தி பீட தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த 21ம் கொடியேற்றத்துடன் மாசி மாத பிரமோற்சவம் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தை ஒட்டி காலை, மாலை என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் காஞ்சி காமாட்சி அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிரமோற்சவத்தின் 11ம் நாளான நேற்று வைலெட் கரை, ஆரஞ்சு நிற பட்டுடுத்தி, திருவாபரணங்கள், செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்ச வர்ண பூ மலர் மாலைகள் அணிந்து லட்சுமி, சரஸ்வதியுடன் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்பாள் கோயில் வளாகத்தில் உலா வந்து பஞ்ச கங்கா தீர்த்த குளத்தில் உள்ள உற்சவம் மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர் காமாட்சி அம்மனின் அம்சமான அங்குசத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயந்திரர், கோயில் ஸ்தானிகர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமப்பூ, உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். பின்பு காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் ஸ்தானியர்கள் கோயில் குளத்தில் அம்மனின் அம்சமான அங்குசத்தை மூழ்கி நீராட்டு செய்து தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் என ஏரளானோர் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்து, வணங்கி வழிபட்டு சென்றனர்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசி மகப்பெருவிழா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம், அதன்படி, இந்தாண்டு மாசி மக விழாவையொட்டி, வேதகிரீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நேற்று நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் பல்லக்கில் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சங்கு தீரத்த குளத்தை அடைந்தனர். இதனையடுத்து, சங்கு தீர்த்த குளக்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் பக்தர்கள், குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.