Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 43,931 மாணவர்கள் எழுதினர்

காஞ்சிபுரம், மார்ச் 3: தமிழ்நாடு முழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கி வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்புக்கு நேற்று நடைபெற்ற பொதுத்தேர்வுக்கு, அந்தந்த பள்ளிகள் வாயிலாக மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 107 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வினை எழுதும் தேர்வு மையங்களாக மொத்தம் 57 பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பில் 6,875 மாணவர்களும், 7,528 மாணவிகளும் என மொத்தம் 14,402 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் நேற்று மொத்தம் 13,953 பேர் பொதுத் தேர்வினை எழுதினர். 76 பேர் தேர்வுக்கு வரவில்லை.

57 தேர்வு மையங்களுக்கும் 57 முதன்மை கண்காணிப்பாளர்களும், 80 பறக்கும் படை அதிகாரிகளும் பள்ளிக்கல்வி தேர்வுத் துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், பெரிய காஞ்சிபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மையத்தினை காஞ்சி புதிய கலெக்டர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் முதன்மை கல்வி அலுவலர் நளினி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 29,438 மாணவர்கள் எழுதினர். இதில் 13,893 மாணவர்களும், 15,545 மாணவிகளும் அடங்குவர். நேற்று கலெக்டர் மாலதி ஹெலன் செங்கல்பட்டில் உள்ள ஒரு அரசுப்பள்ளித் தேர்வு மையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு அறையில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பதையும், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மாவட்டம் முழுவதும் தேர்வுப் பணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகளைத் தவிர்க்க மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு மையங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. முறைகேடு நடைபெறாமல் தடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.