மாமல்லபுரம், அக்.28: மாமல்லபுரத்தில் பொதுப்பணித் துறை சாலையையொட்டி கோனேரி ஏரி உள்ளது. சுமார் 8 ஏக்கர் பரப்பில், பல அடி ஆழத்துடன் இருந்த இந்த ஏரி பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து கேட்பாரற்று காணப்பட்டது. இந்த ஏரியை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி ஆழப்படுத்தி, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு படகில் சவாரி செய்யவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த, 2024ம் ஆண்டு மே மாதம் கோனேரி ஏரியில் பல்லுயிர் இனப்பெருக்கத்தை பாதுகாக்கவும், மாணவ - மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நீர் மேலாண்மையின் ஒரு எடுத்துக்காட்டாக சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர், எந்த பணியும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து, கடந்த 25ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன், நகராட்சி அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேற்று நேரில் வந்து, கோனேரி ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோனேரி ஏரியை சுற்றி முளைத்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஆய்வு மாளிகைக்கு எதிரே மழையின் அளவை கணக்கிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மழைமானியின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மழைமானிகளை முறையாக பராமரித்திடவும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரித்திட வருவாய்த்துறை, நீர்வளத்துறை, நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாமல்லபுரம் நகராட்சி ஆணையாளர் அபர்ணா, நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


