Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பறவைகள் குவிந்து வரும் நிலையில்; வேடந்தாங்கல் சரணாலயம்; ஏரியில் தண்ணீர் வற்றியது!!

மதுராந்தகம்: வடகிழக்கு பருவ மழை தொடங்கி, நத்தை குத்தி பறவைகள் குவிந்து வரும் நிலையில், வேடந்தாங்கல் சரணாலயம் ஏரியில் தண்ணீர் வற்றி குட்டை போன்று மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 21 வகையான நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ணநாரை, நீர்காகம், பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊசி வாத்து, நாமகோழி உள்ளிட்ட பறவைகள் சரணாலயத்தில், ஏரியில் உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு குஞ்சு பறவைகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம். சரணாலயம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையால் சரணாலயத்தில் உள்ள ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும். ஆனால், வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வேடந்தாங்கல் பகுதியில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனது.

இதனால் வேடந்தாங்கல் ஏரியில் குட்டை போன்று மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், சரணாலயம் ஏரியில் உள்ள மரங்களில் புதிதாக வந்து தங்கியுள்ள நத்தை குத்தி நாரை பறவைகள் ஏரியில் உள்ள செடி கொடிகளை பறித்து கூடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பறவைகளை ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் பார்வையிட உள்ளதால் சரணாலயத்தில் பராமரிப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

இந்த சரணாலயத்திற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, செல்போன், கேமரா கொண்டு செல்ல ரூ.50, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் பெரியவருக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, கேமரா மற்றும் செல்போன் கொண்டு செல்ல ரூ.500 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.