கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்: நகராட்சி கமிஷனர் ஒரு வாரம் காலக்கெடு
கூடுவாஞ்சேரி, ஆக.28: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை நேற்று அதிகாரிகள் அகற்ற வந்தனர். அப்போது அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, நகராட்சி கமிஷனர் ஒரு வாரம் காலக்கெடு கொடுத்தததையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இதில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்சி சாலையில் தொடங்கி செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் முடிவடையும் கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலை வரை 10க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.
இதில் இரு வழிச் சாலையாக இருந்து வந்த மேற்படி சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றிய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்து, சரிவர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையை அமைத்துள்ளனர். இதில், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை அடுத்த நந்திவரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏராளமான தொழிற்சாலைகள், கம்பெனிகள் உள்ளன. இதில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்குள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவியாய் தவித்து வருகின்றனர்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் செல்லக்கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையிலிருந்து நந்திவரம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ஊழியர்கள் அப்பகுதிக்கு நேற்று வந்தனர்.
அப்போது இதனை கண்டதும் சாலையோரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலைக்கு திரண்டு வந்து ஒரு நிமிடம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கூடுவாஞ்சேரி போலீசார் ஒரு நிமிடம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி கமிஷனர் லதா ஒரு வாரம் கால அவகாசம் கொடுப்பதாக நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கூடுவாஞ்சேரியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



