Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பூங்கா ரயில் நிலையம் - பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை விரைவில் மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள்

2028க்குள் மெட்ரோ வழித்தடமாக மாற்ற முடிவு

தாம்பரம், ஜூன் 16: பூங்கா ரயில் நிலையம் - பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை விரைவில் மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 2028க்குள் முழுமையாக மெட்ரோ வழித்தடமாக எம்.ஆர்.டி.எஸ் மாறப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை பூங்கா ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை சுமார் 19 கிலோமீட்டர் தூரம் இயங்கி வரும் பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்) சேவை, தெற்கு சென்னை மற்றும் நகர மையப் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருந்து வருகிறது. 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவையை தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால், இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் தரம் குறைந்ததோடு, பாதுகாப்பு மற்றும் வசதி தொடர்பான கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து, பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து எழுந்து வந்தது. இதைக் கருத்தில் கொண்டு, வேளச்சேரி பரங்கிமலையை சென்னையின் மைய பகுதியிலிருந்து தெற்கே இணைக்கும் முழு திட்டத்தையும் சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில் தமிழக அரசும் ஆர்வம் காட்டியது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவுடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டு பிரதமர் அலுவலகம் தற்போது நேரடியாக தலையிட்டு சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது ரயில்வே வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது. சில தொழில்நுட்ப திருத்தங்களுடன் அடுத்த ஒரு மாதத்திற்குள் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. பறக்கும் ரயில் சேவை பாதையை முழுமையாக மெட்ரோ தரத்திற்கு உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, தற்போதைய தண்டவாளங்களுக்கு ஏற்ற வகையில் புதிய மெட்ரோ ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. சிக்னல் அமைப்புகள் நவீனமயமாக்கப்படுவதுடன், பயணிகள் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும், நிலையங்களை வருவாய் ஈட்டும் மையங்களாக மாற்றும் நோக்கில் வணிக வளாகங்கள் மற்றும் நவீன வசதிகளும் உருவாக்கப்படவுள்ளன. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான 18 நிலையங்களும், வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையிலான 3 ரயில் நிலையங்களும் சேர்த்து மொத்தம் 21 நிலையங்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்து, பறக்கும் ரயில் சேவை வழித்தடத்தை முழுமையான மெட்ரோ சேவையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை பொதுமக்களின் பயணத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதைய கட்டண முறையிலும் சேவை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழக அரசு மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து எடுத்துள்ள இந்த முயற்சிக்கு ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் மூலம் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுக்கு இணையான தரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன. இதுதொடர்பான விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது சில திருத்தங்களுடன் அந்த முன்மொழிவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. ரயில்வே வாரியத்தின் இறுதி அனுமதி கிடைத்தவுடன், திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கும்.

பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கை, நகரின் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் நவீன பயண அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றனர்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

* பறக்கும் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைத்தல்.

* சிக்னல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை நவீனப்படுத்துதல்.

* பறக்கும் ரயில் பாதைக்கு ஏற்ற சிறப்பு மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்தல்.

* அனைத்து நிலையங்களிலும் மின்தூக்கி மற்றும் நகரும் மின்படிக்கட்டுகள் அமைத்தல்.

* பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துதல்.

* நிலையங்களை ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்களாக மாற்றுதல்.