வேளச்சேரி, மார்ச் 25: பள்ளிகரணை, காமாட்சி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வகுமார் (20). இவர் ஜல்லடியன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து கொண்டே, விடுமுறை நாட்களில் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் கோவிலம்பாக்கம் பகுதியில் உணவு டெலிவரி செய்துவிட்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறியுள்ளனர். பின்னர், கோவிலம்பாக்கம் அரசு பள்ளி மற்றும் மேடவாக்கம் போலீஸ் பூத் இடையே வந்து கொண்டிருந்தபோது, பைக்கில் இருந்து இறங்கிய அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வகுமார் தலையில் வெட்டி விட்டு அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து மேடவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


