Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் திடீர் மழை, சூறைக்காற்று 17 விமான சேவை பாதிப்பு

மீனம்பாக்கம்: சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென மாலை 3 மணி அளவில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து தத்தளித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மொத்தம் 17 விமான சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் திடீரென பலத்த மழை பெய்தது. மேலும், மாலை 3 மணியில் இருந்து திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

இதையடுத்து அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்கள், சூறைக்காற்று காரணமாக தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தன. இலங்கையில் இருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூருவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதுரையிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள், மேலும் கோவை, தூத்துக்குடி, துர்க்காபூர், அந்தமான் ஆகிய 9 விமானங்கள், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் தொடர்ந்து வட்டமடித்தன. பின்பு சூறைக்காற்று மழை ஓய்ந்த பின்பு, விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க தொடங்கின.

அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான மும்பை, கொல்கத்தா, திருச்சி, ராஜமுந்திரி, மதுரை, புனே, கோவை, கவுகாத்தி ஆகிய 8 விமானங்கள் சூறைக்காற்று காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன. இதேபோல் சென்னை விமான நிலைய பகுதியில் மாலை 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று, மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் 17 விமானங்கள் தாமதமாகி, பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.