Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமான நிலையத்தில் 20 ஆண்டுகள் பழமையான மரம் வேருடன் சாய்ந்தது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய வளாகத்தில் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள ஐஏடி எனப்படும் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் டிவிஷன் அலுவலகமும், என்ஏடி எனப்படும் நேஷனல் ஏர்போர்ட் டிவிஷன் அலுவலகமும் அருகருகே அமைந்துள்ளன.

இந்த இரு அலுவலகங்களுக்கும் நடுவில், நிழல் கொடுக்கக்கூடிய பெரிய மரங்கள் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்த மரங்களை பராமரிப்பதற்கு, தனி ஒப்பந்ததாரர்களை இந்திய விமான நிலைய ஆணையம் நியமனம் செய்துள்ளது. இந்த மரங்கள் ஓங்கி வளர்ந்து, அழகிய பூக்களுடன் பூத்துக் குலுங்கி, நிழல் தரும் மரங்களாகவும் உள்ளன. விமான நிலைய இயக்குனர் அலுவலகம் மற்றும் நிர்வாக அலுவலகத்திற்கு வருபவர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த மரங்களின் நிழல்களில் நிறுத்தப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று மதியம் திடீரென ஒரு பெரிய மரம் வேருடன் பெயர்ந்து கீழே சாய்ந்தது. இதனால் மர நிழலில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மரங்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து, திடீரென வேருடன் சாய்ந்து விழுந்த மரத்தை ஆய்வு செய்ததோடு, விமான நிலைய கடை நிலை ஊழியர்களை வரவழைத்து, மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இந்த மரத்தை காக்கா பூ மரம் என்று கூறுகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த மரம் சாய்ந்து விழுந்த போது, மரத்தின் அடியில் யாரும் இல்லை. ஆனால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த மரம் விழுந்து இருந்தால், உணவு இடைவேளையின் போது, ஏராளமான விமான நிலைய ஊழியர்கள், மரத்தின் அடியில் நிழலில் வந்து நின்று இருப்பார்கள். அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருக்கும். நேற்று மதியம் மரம் விழுந்த போது, காற்று மழை போன்ற எந்தவிதமான மோசமான வானிலையும் நிலவவில்லை. ஆனாலும் மரம் திடீரென வேருடன் சாய்ந்து விழுந்ததன் காரணம் என்ன என்று அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.