மாமல்லபுரம்: குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் அங்கன்வாடி அருகே தேங்கி நிற்கும் மழைநீரால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த, வாரம் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள அங்கன்வாடி மையத்தையொட்டியுள்ள தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழைநீர் தேங்கி நின்று, கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் தேங்கி நிற்கும் மழைநீரில் வெகுளித்தனமாக மழைநீரில் குதித்தும், புரண்டும் சேற்றை மேலே பூசிக்கொண்டும் விளையாடுகின்றனர். இதனால், குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கு டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 4 நாட்களாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உள்ளிட்ட பலர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் முட்டையிட்டு கொசு பண்ணையாக மாறும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், மழைநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது. எனவே, கலெக்டர் உடனடியாக தலையிட்டு, குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதற்கு முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றி, கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


