Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை காஞ்சி கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை, மாவட்ட கலெக்டர் தி.சினேகா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுச்சூர், படப்பை, துண்டல்கழனி மற்றும் வரதராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை, கலெக்டர் சினேகா நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதில் குன்றத்தூர் ஒன்றியம், எழுச்சூர் ஊராட்சியில் 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் ரூ.5.29 லட்சம் மதிப்பீட்டில் எழுச்சூர் ஏரி வரத்து கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணியினை ஆய்வு செய்த கலெக்டர், கால்வாய் பணியின் தற்போதைய நிலைகளை மேற்பார்வையாளரிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து படப்பை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து, அங்கன்வாடி மையத்தில் 31 குழந்தைகள் வருகை பதிவேட்டில் 26 குழந்தைகள் வருகை புரிந்ததை பதிவேடு ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு மற்றும் முட்டைகளின் தரத்தை ஆய்வு செய்து, பின்பு குழந்தைகளுக்கு எடை உயரம் அளவீடு செய்யப்பட்ட பதிவேடுகளை பார்வையிட்டு, குழந்தைகளின் தற்போதைய எடை மற்றும் உயரம் அளவீடுகள் செய்யப்படுவதை ஆய்வு செய்தார். குழந்தைகளின் கழிவறையை ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடி, அறிவு திறனை கேட்டறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

பின்பு, துண்டல்கழனி நியாய விலைக்கடையில் ஆய்வு செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட விவரம், கடையில் இருப்பில் உள்ள பொருட்களை ஆய்வு செய்து, உணவு பொருட்களின் இருப்பு பதிவேடு ஆய்வு செய்தார். தொடர்ந்து, வரதராஜபுரம் ஊராட்சியிலுள்ள மழை வடிநீர் கால்வாயை ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழையின்போது மழை வெள்ளம் பாதிப்புகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது உதவி பொறியாளர் திருமலை, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜசேகரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பானுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.