Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரி போல் நடித்து பயணியிடம் 12 சவரன் அபேஸ்: போலீசார் விசாரணை

மீனம்பாக்கம், ஜூலை 30: சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரி போல் நடித்து பயணியிடம் 12 சவரன் நெக்லஸை அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (23), விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கோவையிலிருந்து, சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், பெண் பயணி ஒருவர் கொண்டு வரும் பை ஒன்றை வாங்கிக்கொண்டு, விருகம்பாக்கம் அலுவலகத்திற்கு செல்வதற்காக உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

விமானத்தில் வந்த பெண் பயணியை அடையாளம் கண்டுகொண்டு, அவர் கொண்டு வந்த கவரை வாங்கிக் கொண்டு, இருவரும் சென்னை விமான நிலைய டெர்மினல்-1 போர்டிகோ பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர் அவர்களை நிறுத்தி, நான் சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி அவர்களது பையை சோதனையிட்டுள்ளார். அப்போது அந்த பெண் கொண்டு வந்த பையில் 12 சவரன் நெக்லஸ் இருந்துள்ளது. அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி நந்தகோபால் கையில் வைத்திருந்த பையை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என்று கூறிவிட்டு, அந்த ஆசாமி வேகமாக சர்வதேச முனையம் நோக்கி சென்றார். பின்னர் திடீரென அந்த நபர் மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நந்தகோபால், சர்வதேச முனையம் சென்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் சுங்க அதிகாரிகள் ஆகியோரிடம் இது குறித்து கூறினார். உடனே அவர்கள் சுங்க அலுவலகத்தில் விசாரித்துவிட்டு நந்தகோபாலிடம், சுங்கத்துறையைச் சேர்ந்த யாரும் பயணியிடம் இருந்தும் பை எதையும் வாங்கி வரவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையம் சென்று நகை பறித்த சம்பவம் குறித்து நந்தகோபால் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக, சுங்க அதிகாரி போல் நடித்து பயணியிடம் தங்க நெக்லஸை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.