காஞ்சிபுரம், ஆக.29: தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் காவலாம் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணை செயலாளர் காயத்ரி வரவேற்று பேசினார். நிர்வாகிகள் பசுமதி, பாலு, சீனிவாசன், ராணி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் துரைவேலு, துணைத்தலைவர் திலகவதி, மகளிர் துணைக் குழு நிர்வாகி எம்பி திலகம், தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி சாரங்கன், தென்னரசு, பொதுப்பணி ஓய்வூதிய சங்க கூட்டமைப்பு தலைவர் சீதாராமன், தமிழ்நாடு அரசு சங்க மாவட்ட செயலாளர் துரை.மருதன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், உயர்த்தப்பட்ட தொகுப்புடன் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற பிற ஊழியர்களுக்கு அரசு பண்டிகை முன்பணம் வழங்குவபோது போல சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட பொருளாளர் ஷீலா விஜயகுமாரி நன்றி கூறினார். தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பாபு, விஸ்வநாதன், துலுக்காணம், அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராமமூர்த்தி பேசினார்.



