காஞ்சிபுரம்: கீழ்கதிர்பூர் கிராமத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இம்மழையின் காரணமாக காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால், சிறு குளங்கள் முதல் ஏரிகள் வரை தண்ணீர் நிரம்பி வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் நான்குவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டதில் மழைநீர் வடிகால்வாய்க்கு நேராக குழாய் மற்றும் சிறுபாலம் அமைக்கப்படவில்லை. இதனால் விளை நிலங்களுக்கு கால்வாய் நேராக வருமாறு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழையால், விளை நிலத்தில் மழைநீர் பாய்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. முறையாக வெளியேற வேண்டிய மழைநீரை, பொதுப்பணித்துறை தவறாக வெளியேற்றியதால் தற்போது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பொதுபணித் துறையினர், விவசாயிகள் நலன் கருதி உடனடியாக இக்கால்வாயினை முறைப்படுத்தி, மழைநீர் சரியான வகையில் வெளியேற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


