Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

30 அடி கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு

பல்லாவரம், ஜூலை 28: பல்லாவரத்தில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவரை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பல்லாவரம், புருஷோத்தமன் தெருவை சேர்ந்தவர் ஜோசப் (70). இவரது, வீட்டின் அருகே சுமார் 30 அடி ஆழம் மற்றும் 6 அடி அகலம் கொண்ட பொது கிணறு உள்ளது. நேற்று, அதன் அருகே சென்ற ஜோசப், வயது முதிர்வு காரணமாக திடீரென நிலை தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால், கீழே விழுந்த வேகத்தில் பலத்த காயமடைந்த ஜோசப், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக்கண்டு அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு, கயிறு ஒன்றின் உதவியுடன் 30 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கினர். அங்கு காயமடைந்து கிடந்த ஜோசப்பை மற்றொரு கயிற்றால் கட்டி, பத்திரமாக மேலே இருந்த வீரர்களின் உதவியுடன் உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடங்களில் உள்ள பயன்பாடற்ற பாழடைந்த கிணறுகளை, பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். இதன் மூலம் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது தடுக்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.