Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வைகாசி விசாக பிரமோற்சவத்தையொட்டி வல்லக்கோட்டை, வெண்காட்டீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மதுராந்தகம், மே 28: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கடப்பேரி பகுதியில் மீனாட்சி அம்பாள் சமேத வெண்காட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை இக்கோயிலை நிர்வகித்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக பிரமோற்சவ விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனையொட்டி ராஜகோபுரம், உள்பிரகார சன்னதிகள் ஆகியவை வண்ண விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த 22ம் தேதி ராஜகோபுரம் அருகில் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க யாக பூஜை செய்து கொடி மரத்தில் கொடி ஏற்றி வைத்து வைகாசி விசாக விழாவை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, பஞ்ச மூர்த்தி புறப்பாடு சூரிய பிறை, சந்திர பிறை, அதிகார நந்தி, திருமுல்லைப்பால் உற்சவம், பூத வாகனம் புறப்பாடு, யாளி வாகனம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. தேர்த் திருவிழா தினமான நேற்று காலை மங்கல இசை முழங்க வெண்காட்டீஸ்வரர் மீனாட்சி அம்பாள் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. காலை 10 மணியளவில் வெண்காட்டீஸ்வரர், மீனாட்சி அம்பாள், முருகப்பெருமான்-வள்ளி தெய்வானை சுவாமிகள் மூன்று தேர்களில் எழுந்தருளி தேர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்று கோஷமிட்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர்.

நகரின் முக்கிய வீதிகளில் சென்ற தேரானது 2.30 மணி அளவில் நிலையை சென்றடைந்தது. மேலும் கேடயம் புறப்பாடு, குதிரை வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, மஞ்சள் நீர் வீதி உலா தீர்த்தவாரி விடையாற்றி சுவாமி அம்மன் வீதி உலா, சங்காபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் 31ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மேகவண்ணன், ஆய்வாளர் வேலு நாயகன், அறங்காவலர் குழு தலைவர் ராஜேஷ், அறங்காவலர்கள் சுந்தரி, அன்பழகன், முன்னாள் அறங்காவலர் புருஷோத்தமன் உள்ளிட்ட கடப்பேரி கிராம விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

*காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வல்லக்கோட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிரமோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் செவ்வாய்க்கிழமை காலை கற்பகவிருட்ச வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்தார். நேற்று காலை 7 மணிக்கு கோயில் பிரகாரத்தில் ரத உற்சவம் நடைபெற்றது. இதில், அமைச்சர் தென்னரசு கலந்துகொண்டு தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக ரத உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு தேர் முழுதும் வண்ண மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 5 மணிக்கு தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சப்பரத்தேரில் முருகப்பெருமான் எழுந்தருளி வல்லக்கோட்டை கிராமத்தில் வீதி உலா வந்தார். தேரில் வாழைமரம், தென்னங்குருத்து, ஈச்சங்குருத்து, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேரோட்ட ஏற்பாடுகளை காஞ்சிபுரம் இணை ஆணையர் குமரதுரை அறிவுரைப்படி திருக்கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.