Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்போரூர் பேரூராட்சியில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம்

திருப்போரூர், ஜூலை 27: திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் சுமார் 25 ஆயிரம் பேருக்கு சிறுதாவூர், செம்பாக்கம், கொண்டங்கி ஆகிய கிராமங்களில் கிணறு தோண்டப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு முறை வைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த பருவமழை சரியாக பெய்யாததால் சிறுதாவூர் கிராமத்தில் உள்ள 5 கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. செம்பாக்கம் கிராமத்தில் உள்ள 2 கிணறுகள், கொண்டங்கி கிராமத்தில் உள்ள 5 கிணறுகள் ஆகியவற்றில் இருந்து வரும் குடிநீரையே பேரூராட்சி முழுவதும் உள்ள மக்கள் நம்பி உள்ளனர்.

கொண்டங்கி கிராமத்தில் இருந்து திருப்போரூர் வரை சுமார் 12 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் சாலையோரத்தில் இருப்பதால் ஆங்காங்கே நடைபெறும் திருவிழாக்கள், நிகழ்ச்சிகளின்போது சாலையோரத்தில் குழி தோண்டப்பட்டு பைப் மூலம் கொடிகள் நடப்படுகின்றன. இவ்வாறு குழி தோண்டப்படும்போது குடிநீர் குழாய்களிலும் சேதம் ஏற்படுகிறது. அந்த இடங்களில் கனரக வாகனங்கள் செல்லும்போது குழாய்களில் விரிசல் அதிகமாகி குடிநீர் வீணாகிறது. நெல்லிக்குப்பம் பெட்ரோல் பங்க் எதிரில் சுமார் 3 மாத காலமாக குடிநீர் வீணாவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோன்ற குடிநீர் குழாய் சேதங்களை குறைத்து குடிநீரை சேமித்தாலே ஒரு நாள் தேவைக்கான குடிநீரை வழங்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இந்த குடிநீர் குழாய்களை பராமரிக்கும் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் ஆங்காங்கே சேதமடைந்த பகுதிகளை விரைவில் சீரமைத்து குடிநீர் சேமிப்பில் முன்னோடியாக விளங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.