Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உத்திரமேரூர் அருகே கோயில் திருவிழாவுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர், ஆக.26: உத்திரமேரூர் அருகே கோயில் திருவிழா நடந்த நிலையில் குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களுக்கு, வாடாதவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், அப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் அனுப்பப்பட்டு, தெரு குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த மின்மோட்டார் பழுதானது. இதனால் கடந்த 3 மாதங்களாக, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குடிநீர் எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்மோட்டாரை சரிசெய்யும்படி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ‘எங்கள் ஊரில் வரும் 25ம் தேதி (நேற்று) மாரியம்மன் கோயில் திருவிழா வர இருக்கிறது. குடிநீர் தேவை அதிகமாக இருக்கும். அதனால் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர். அதன்படி நேற்று கோயில் திருவிழா தொடங்கியது.

ஆனாலும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை, உத்திரமேரூரில் இருந்து குன்னவாக்கம் வழியாக செங்கல்பட்டுக்கு செல்லும் அரசு பஸ்சை வாடாதவூர் பஸ் நிறுத்தம் அருகே சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனே குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.