Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேல்மருவத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம், ஆக.28: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், மேல்மருவத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வளம் மீட்பு பூங்காவினை மாவட்ட கலெக்டர் வீரப்பன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மேல்மருவத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக தரம் பிரித்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தனியாக பிரித்து மீட்டெடுத்தல், மக்கும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பணிகளின் செயல்பாட்டு நிலை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிப்பறைகளில் இரு குழிகள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், ஒரு குழி நிரம்பிய பின்னர் மற்றொரு குழியை பயன்படுத்துதல், நிரம்பிய குழியில் உள்ள கழிவுகள் இயற்கையான முறையில் மக்கி பாதுகாப்பான உரமாக மாறும் செயல்முறை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கலெக்டர் வீரப்பன் கேட்டறிந்தார். அப்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

குப்பை கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ருதி, வட்டார வளர்ச்சி அலுவலர்‌ குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விளக்கமளித்தனர். ஆய்வின்போது மேல்மருவத்தூர் ஊராட்சி செயலாளர் மலர்விழி உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.