Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்போரூர் - நெம்மேலி இடையே குழாய் பதிக்கும் பணியால் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர், ஆக.26: திருப்போரூர் - நெம்மேலி இடையே நடைபெற்ற குழாய் புதைக்கும் பணியால் குண்டும், குழியுமாக மாறி சேறும் சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூரில் இருந்து நெம்மேலி வரையில் சுமார் 3 கி.மீ. தூர சாலையும், இதனிடையே செல்லும் பக்கிங்காம் கால்வாயில் பாலமும் உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, தெற்குப்பட்டு, வடநெம்மேலி, பேரூர், நெம்மேலி, சூளேரிக்காடு, புதிய கல்பாக்கம், கிருஷ்ணன் காரணை, பட்டிபுலம், சாலவான்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வேளாண் அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலகம், மின் வாரிய அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். அதேபோன்று திருப்போரூர், ஆலத்தூர், தண்டலம், செம்பாக்கம், மடையத்தூர், கொட்டமேடு, மயிலை, கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் நெம்மேலியில் உள்ள அரசு கல்லூரிக்கும், கோவளம், நெம்மேலி பகுதிகளில் உள்ள கடற்கரைக்கும் செல்கின்றனர்.

24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெறும் இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் குழாய்கள் புதைக்கும் பணி அண்மையில் நடந்து முடிந்தது. குழாய்கள் புதைப்பதற்காக சாலையின் பெரும்பாலான பகுதி தோண்டப்பட்டதால் சில நாட்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, குழாய்கள் புதைக்கும் பணி முடிவடைந்து தோண்டப்பட்ட பள்ளங்களில் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. இதனால் சாலை இருந்த தடமே தெரியாமல் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக பயன்படுத்துவதற்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கடும் அவதிக்குள்ளாகின்றன. எனவே, குழாய் புதைக்கும் திட்டத்தை நிறைவேற்றிய குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம், புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், சாலையின் அகலம் குறைவாக உள்ளதால் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் எதிரெதிரே செல்வதும் சிக்கலாக உள்ளது. எனவே, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த திருப்போரூர் - நெம்மேலி இடையிலான சாலையை அகலப்படுத்தி பள்ளங்கள் நிறைந்த சாலையினை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

மின் விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்த சாலை

இந்த சாலையில் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள கம்பங்களில் அவை பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதன் காரணமாக இந்த சாலை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மிகவும் இருளடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே சைக்கிள், பைக்கில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே, திருப்போரூரில் இருந்து நெம்மேலி செல்லும் சாலையை சீரமைத்து மின் விளக்கு வசதியை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.