செங்கல்பட்டு, ஆக.26: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம், பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டப்பணிகள் தற்போது சுமார் 96% வரை நிறைவடைந்துள்ளன. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் பாரத்நெட் திட்டம் கட்டம் IIன் கீழ், இறுதிக்கட்ட இணைய இணைப்பு சேவைகளை வழங்குவதற்காக வருவாய் பகிர்வு அடிப்படையில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்ய, 3 வருவாய் கோட்டங்களுக்கு மீண்டும் விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த 12ம் தேதி முதல் TANFINET என்ற இணையதளத்தில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://tanfinet.tn.gov.in இணையதள முகவரியையும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு 044- 24965595 என்ற உதவி மைய எண்ணையும் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு கூறியுள்ளது.



