காஞ்சிபுரம், ஆக.28: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கி வீடுகளையும், சொத்துகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். இதில் முக்கியமாக தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலாவாகவும், ஆன்மிக பயணமாகவும் சென்ற ஏராளமானோரும் இந்த வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளனர்.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 6 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்ற ஆணையிட்டார். இதனையடுத்து காஞ்சிபுரம் பீடாதிபதிகளின் ஆணையின்படி காமாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுர நுழைவு வாயிலில் நேற்று இரவு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.



