Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் பயிற்சி: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 26: தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 50 நாட்கள். மேலும், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி, படிப்பதாற்கான செலவின தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக, வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்பகால மாத ஊதியமாக சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.