Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு; அரசு விழா தவெக கட்சி விழாவாக மாறிய அவலம்: கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிருப்தி

ஸ்ரீபெரும்புதூர், மே 26: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ரூ.89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான தென்னரசு கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு விழாவை அமைச்சர் தென்னரசு தவெக விழாவாக மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் பார்த்திபனிடம் கத்தரிக்கோல் வழங்க சொல்லி ஒன்றிய செயலாளர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குத்துவிளக்கு ஏற்றும்போதும் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியரை தொடர்ந்து ஒன்றிய செயலாளர் பார்த்திபனும் குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டையும் ரிமோட் மூலம் திறந்து திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அறைக்கு சென்ற அமைச்சர், தவெக நிர்வாகிகளை ஒன்றாக வரவழைத்து ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டது அரசு அலுவலர்கள் மத்தியில் முகம் சுழிப்பை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் மேலாக சட்டமன்ற உறுப்பினர் இருக்கையில் ஒன்றிய செயலாளர்களான பார்த்திபன், சங்கர் ஆகிய இருவரையும் குழந்தைகள் போல விளையாடிக் கொண்டு விளையாட்டுத் தனமாக மாறி மாறி அமர வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்த அரசு விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தவெக நிர்வாகிகள் 700 க்கும் மேற்பட்டோர் கூடியதால் அலுவலகம் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரவும், அரசு அதிகாரிகள் உள்ளே செல்லவும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். அரசு நிர்வாகத்தில் தவெகவினர் பங்கு கொள்ளகூடாது, எல்லை மீறி நடக்க கூடாது என்று தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் தெரிவித்த நிலையில் கட்சி நிர்வாகிகளை ஆட்சியருக்கு அறிமுகம் செய்து வைப்பது, சட்டமன்ற உறுப்பினர் இருக்கையில் அமரவைப்பது, போன்ற விஷயங்களை செய்து தவெகவின் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தென்னரசு பொதுச் செயலாளர் எச்சரிக்கையை மீறி நடந்துக் கொண்டதாக கட்சி வட்டாரத்தில் உள்ள நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.